ஓம் ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்ஓம் ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள் பருமனாக இருப்பார்.
நல்ல வாட்ட சாட்டமான உடல்.நல்ல உயரம்.நல்ல சிவப்பு.

சிறு வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு விட்டு,தான்
களிமண்ணால் செய்த பிள்ளையாருக்கு, பூக்கள் தொடுத்து மாலை
அணிவித்து பூஜை செய்வார். எப்போதும் பிள்ளையாருக்கு
அலங்காரம் செய்து மகிழ்வார்.

அதுசமயம் ஒரு பெண் சிறுவன்
வணங்கிய மண்பிள்ளையாரை வணங்கினாள். சிறுவனுக்கு
சந்தோஷம் தாங்க முடியவில்லை.தன் கையால் செய்து, தான்
வணங்கி வரும் பிள்ளையாரை ஒரு பெண்ணும் வணங்குவதைக்
கண்டு-மகிழ்ச்சி பொங்க அந்த பெண்ணின் கையை பிடித்து
முத்தம் கொடுத்து விட்டார்.அப்பெண் கோபம் கொண்டு
“உன் அக்கா வயதிருக்கும் என் கையை பிடித்து-முத்தம்
கொடுக்கிறாயா ? “ என்று கோபித்து கடுமையாக பேசி விட்டு
சென்று விட்டாள். அப்பெண் பேசியதை சிறுவனால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை.அதையே நினைத்து நினைத்து
மருகினார்.

பெண் இன்பத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதற்காக
வேண்டி எல்லா பெண்களையும் தன் சகோதரிகளாக கருதினார்.
எந்த பெண்ணைக் கண்டாலும் “ அக்கா” “அக்கா” என்றே
கூப்பிடுவார்.

அதனால் எல்லோரும் இவரை "அக்கா சாமியார்” என்றும்
“அக்கா பரதேசி சாமியார் “ என்றும் “அக்கா சித்தர் ” என்றும்
பலவாறு அழைத்து வந்தனர்.
கடைசியில் “குரு அக்கா சுவாமிகள்” என்ற பெயரே நிலைத்து
விட்டது.

ஒரு நாள் இவர் வீதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது,
ஒரு இடத்தில் பிச்சை கேட்டார். அப்பொழுது ஒரு வயதான
பெண்மனி, இவருக்குள்ள வாட்ட சாட்டமான உடம்பிற்கு
உழைத்து சாப்பிடலாமே-ஏன் பிச்சை எடுக்க வேண்டும்
என்று கேட்க- செஞ்சிக்கு சென்று வேலை தேடினார்.

போலீஸ் வேலைக்கு மனு செய்து வேலையும் கிடைத்தது.
காலம் சென்றது. ஒரு நாள் இவரின் மேலதிகாரி, மீன் வாங்கி
வீட்டில் கொடுத்து விட்டு வரச் சொன்னார்.அதைச் சுவாமிகள்,
தாம் சாப்பிடுகின்ற ஒரு பெரியம்மாள் வீட்டில் கொடுத்து
விட்டு வந்து விட்டார். அன்றிரவு, அம்மேலதிகாரி வீட்டிற்கு
மீன் வராததைக் கண்டு கோபம் கொண்டு-சுவாமிகளைத் தேடி
காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு சுவாமிகள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மறுநாள்
அவரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்து, வீட்டிற்கு
திரும்பினார்.

மறு நாள் அதிகாரி சுவாமிகளிடம் மீனைப் பற்றி விசாரித்தார்.
மீன் பத்திரமாக இருப்பதாகக் கூறி அப்பெரியம்மாளிடமிருந்து
மீனை வாங்கிக் கொண்டு வந்து காட்டினார். அதைக் கண்ட
அதிகாரிக்கு கோபம் அதிகமானது. இரவு மீனை சாப்பிடவிடாமல்
கெடுத்து விட்டானே என்று கொதித்தார். மேலதிகாரியின்
கையிலிருந்த செத்த மீன்கள் உயிர்பெற்று துள்ளிக் குதித்தன.
அதைக்கண்ட மேலதிகாரி அதிர்ச்சியடைந்தார்.

உடனே சுவாமிகள், தம்முடைய உடுப்பைக் கழற்றி வைத்து
விட்டு சொன்னார். நள்ளிரவில் மேலதிகாரி வீட்டில்
நடந்தவைகள்,காவல் நிலையத்திற்கு அவர் வந்தது, பேசிய
பேச்சுக்கள், எண்ணிய எண்ணங்கள், எல்லாவற்றையும்
ஒன்று விடாமல் சொன்னார். “சாகும் பிணங்கள் -இன்று செத்த
பிணத்தை தின்னும். மனிதரிடம் சேவகம் செய்ய விரும்பேன் “
என்று கூறி விட்டு புதுவையை நோக்கி புறப்பட்டார்.

புதுவைக்கு வந்த சுவாமிகள் -வாழைக்குளம் என்னும் பகுதியில்
தங்கியிருந்து சிவத்தியானம் செய்து வந்தார்.ஆத்ம சாதனையில்
வெற்றி கண்டார்.
ஆத்ம ஞானிகளின் சாதனை முறைகள் பல உண்டு.மண்ணை
உருட்டிக் கொண்டே ஒருவர் ஆத்ம சாதனை செய்தார்.
அவர் மண்ணுருட்டி சுவாமிகள்.

காஞ்சிபுரத்தில் ஒருவர் இரு கைகளையும் மேலே தூக்கி
ஆட்டிக் கொண்டே ஆத்ம சாதனை செய்து வந்தார்.

நமது சுவாமிகளோ, பனை ஓலையை மிக மெல்லியதாக கிழித்து கொண்டேயிருந்து ஆத்ம சாதனை செய்து வந்தார்.

சுவாமிகளுக்கு சாப்பாடு கொடுக்க பல அன்பர்கள் காத்துக்
கொண்டிருப்பார்கள். ஒரு வீட்டில் சுவாமிகள் சாப்பிட
வேண்டுமென்றால் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற
நிபந்தனையின் பேரில் சாப்பிடுவார்.

அந்த ஒரு ரூபாயை கொண்டு வ்ந்து --புதுவை,
சோலைத்தாண்டவ குப்பத்தில் வசித்த ஒரு அச்சுக்கூடத்தார்
வீட்டில் கொடுப்பார். இப்படியாக பல மாதங்கள்
கொடுத்து வந்தார். திடீரென்று ஒரு நாள், ஒரு ரூபாயைக்
கொடுத்துவிட்டு “இன்றோடு முன்பட்ட கடன் தீர்ந்து விட்டது “
என்று சொல்லி சென்றார்.

தன் ஊழ்வினையை எப்படி அழிப்பது என்று அறிந்திருந்தார்.

ஒரு சமயம் சுவாமிகள் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.அங்கு
ஒரு பெரும் செல்வந்தர் சுவாமிகளின் பெருமையை நம்பாமல்,
கேலி செய்தார். “ சுவாமிகள்-என்ன, அபிஷேகம் செய்து கொள்ளுமா ?
” என்று ஏளனம் செய்தார்.சுவாமிகளும் சிரித்துக் கொண்டே
“ ஓ- தாராளமாக செய்யலாமே” என்று பதிலளித்தார்.

சுவாமிகளை அமரச் செய்து-வேண்டும் என்றே அவர் மேல், சுடச் சுட
அன்னத்தை வடித்துக் கொட்டினார்கள்.சுவாமிகள் அமைதியாக
நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.அன்னாபிஷேகம் முடிந்தது.

சிறிது நேரம் கழித்து சாதத்தின் சூடு ஆறியதும்,
“ சுவாமிகள் இந்நேரம் பரலோகம் சென்றிருப்பார்” என்று
கேலி பேசியவாறு அவர் மேலிருந்த சாதத்தை விலக்கிப்
பார்த்தனர்.சுவாமிகள் ஆடாமல், அசையாமல் யோகத்தில்
இருந்ததைப் பார்த்து-அவரின் சக்தியை உணர்ந்தனர்.தங்கள்
தவற்றை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டனர்.
அன்னாபிஷேகம் செய்தவரின் பார்வை போய் விட்டது.

பின்னர் சுவாமிகள் புதுவைக்கு வந்தார்.
சுவாமிகளுடன் கண்பார்வை பறிபோனவரும் புதுவைக்கு
புறப்பட்டு வந்தார்.ஒவ்வொரு நிமிடமும் தான் செய்த
பெரும் பிழையை நினைத்து நினைத்து வருந்தினார்.
இப்படியே சில காலம் சென்றது.

ஒரு நாள், சுவாமிகள் திடீரென்று “ அதோ தெரியும் திருமுருகனைப்
பார்’’ என்று குருடரிடம் சொன்னார். “பார்வையில்லையே-எப்படிப்
பார்ப்பது” என்றார் குருடர்.” நன்றாகப் பார் தெரியும் ” எனச் சுவாமிகள்
சொல்ல -அப்படியே முருகனின் உருவத்தை ஆழ்ந்து நோக்க
கண் பார்வை வந்தது.

ஒரு நாள், தாசிகள் இருவர் சுவாமிகளை எப்படியாவது தங்கள்
வலையில் விழ வைத்து விட வேண்டும் என்று எண்ணி-
அவரிடம் நயவஞ்சகமாக பேசி-புதுவை, மாதா கோவில் வீதியிலுள்ள
தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.வீட்டின் கடைசி பகுதிக்கு
அவரை அழைத்துச் சென்று அவர் மேல் கை வைக்க முயன்றனர்.
சுவாமிகள், சிரித்துக் கொண்டே வேகமாக வெளியே வர-வீட்டின்
ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்தது.வீடே நாசமாகியது.

ஆத்ம ஞானிகள் சத்தியப் பொருள்.அவர்களை கெடுக்க
நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள் என்பது கண் கூடான
உண்மை.

சுவாமிகள்,வாழைக்குளம் பகுதியில்-குதிரைக்குளம் அருகே
சமாதியடைந்தார். அந்த சமாதியின் மேல் லிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டு -சிவாலயம் எழுப்பபட்டுள்ளது.

சுவாமிகளின் சிஷ்யரான குரு நாராயண பரதேசி சுவாமிகளின்
சமாதியும் -அத்திருகோவிலினுள் அமையப் பெற்றுள்ளது.

அந்தக் கோவில் அமைந்துள்ள தெருவிற்கு
“குரு அக்கா மடத்து வீதி “ என்று பெயர்.

சுவாமிகள், தன் கையினால் செய்து பூஜித்து வந்த விநாயகர்
புதுவை,கந்தன் தியேட்டர் (வணிக வளாகம்) அருகில்,
45 அடி ரோடு திருப்பத்தில் அமைந்துள்ளது.மிகவும்
சக்தி வாய்ந்த அந்த விநாயகரை “சாலை விநாயகர்”
என்று அழைக்கிறார்கள். மண் பிள்ளையார் சிறுகச் சிறுக
வளர்ந்து வருவதாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்.


சுவாமிகளின் காலம் 19-ம் நூற்றாண்டு எனவும், சுவாமிகள்
1872-ம் வருடம் ஜீன் மாதம் பரம்பொருளோடு ஐக்கியமானார்
என்றும் தெரிய வருகிறது.

ரெயின்போ நகர் செல்லும் பாதைக்கு அருகில் உள்ளது 

No comments:

Post a Comment