Saturday, March 5, 2016

ஸ்ரீல ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகள்

அரக்கோணத்தில் வாழ்ந்துவந்தார் பூண்டி சுவாமிகளின் அடியவர் ஒருவர். அளவற்ற பொருளாதாரக் கஷ்டத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார். திடீரென ஒரு விபரீதமான முடிவுக்கு வந்துசேர்ந்தார். இரவு பத்துமணி இருக்கும். அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலிலில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணித் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். பூண்டி சுவாமிகளையே தியானம் செய்தவாறு அமைதி காத்தார். ஒரு ரயில் மிக வேகமாக அவர் தலைவைத்துப் படுத்திருந்த இடம் நோக்கி ஓடிவந்தது…
அடுத்த கணம் அவர் அருகில் தோன்றியது பூண்டி மகானின் ஒளிவீசும் பொன்னுருவம். அவரை அப்படியே இரு கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டு அருகே உள்ள மணல் திட்டில்  கிடத்தினார் சுவாமிகள். கூவென்று கூவிய ரயில், பூண்டி சுவாமிகளின் மகிமையைத் தான் தன் மொழியில் கூவியதோ என்னவோ? ரயில், தண்டவாளத்தில் விரைந்து சென்று மறைந்தது.
அன்பருக்குத் தன் கண்களையே நம்பமுடிய வில்லை. ஒரு கணத்தில் என்ன நடந்தது இங்கே?
பூண்டி சுவாமிகள் அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பின் மெல்லச் சொல்லலானார்:
“”அன்பனே! கஷ்ட நஷ்டங்கள் மாறிமாறி வருவதுதானே வாழ்க்கை? வெகுவிரைவில் உனக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இப்போது உன் உயிரை நீ போக்கிக்கொண்டால் அந்த நல்ல காலத்தை நீ எப்படி அனுபவிக்க இயலும்? இறைவன் தந்த உயிரை எடுக்க இறைவனுக்கு மட்டுமே உரிமையுண்டு. உனக்கு அந்த உரிமை கிடையாது மகனே! வீடு நோக்கிப் போ. நல்ல சேதி காத்திருக்கிறது!”பரிவோடும் கருணையோடும் அறிவுறுத்திய பூண்டி மகானின் உருவம் மெல்ல மெல்ல காற்றில் கலந்து மறைந்தது.
அன்பர் திகைப்போடும் பரவசத்தோடும் நடந்து வீடு வந்துசேர்ந்தார். வாசலிலிலேயே யாரோ ஒருவன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அன்பர் அவனிடம் யார் அவன் என விசாரித்தார்.
சென்னையிலிலிருந்து வந்திருந்தான் அவன்.
அன்பருக்கு அறிமுகமான ஓர் ஆங்கிலோ இந்தியர்தான் அவனை அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் நல்ல சம்பளத்தில் ஒரு புதுவேலை அவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதைச் சொல்லிலிற்று அவன் கொண்டுவந்திருந்த கடிதம்!
மறுநாளே பூண்டிக்குப் போய் சுவாமிகளை தரிசித்தார் அன்பர். பக்தியில் நெகிழ்ந்த அவரைப் பார்த்துப் பூண்டி சுவாமிகள் குறும்பாகச் சிரித்தார்.
“”உன் வாழ்க்கை ரயில் இன்னும் ஓட வேண்டியிருக்கிறதே அப்பா!
அதற்குள் என்ன அவசரம்? பட்டினப் பிரவேசம் நிகழ்ந்தபிறகு எல்லாம் சரியாகும்!” சுற்றியிருந்தவர்களுக்கு சுவாமிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவதாகத் தோன்றியது. ஆனால் குறிப்பிட்ட அன்பர் கண்களில் மட்டும்              அவர் அருளை உணர்ந்து அருவிபோல் கண்ணீர் வழிந்தது…

அஷ்டமா சித்திகளைப் பெற்ற சித்தர்கள்
ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் ஆற்றல் பெற்றவர்கள். (நெரூர் சுவாமிகளான சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றி இரண்டு இடங்களில் சித்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.)
பூண்டி சுவாமிகள் தாம் இத்தகைய சித்துகளைச் செய்ததாக நேரடியாக ஒப்புக் கொண்டதில்லை. அன்பர்கள் விசாரித்தாலும் மர்மமான பதில்கள்தான் வரும்.

No comments:

Post a Comment